ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் - ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் இடதுகை பேட்ஸ்மேன் ரிங்கு சிங்குக்கு இடம் கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என கிரிக்கெட்டின் பல மட்டத்திலும் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயத்தில் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் திலக் வர்மா என இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களின் தேவை அதிகமாக இருப்பதற்கு இது சரியான முடிவு தான் என்றாலும், மற்றும் ஒரு இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் இருந்திருக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் திலக் வர்மா 164 ஸ்ட்ரைக்ரேட்டில் 42 ஆவரேஜில் 343 ரன்கள் எடுத்திருந்தார். ரிங்கு சிங் 14 ஆட்டத்தில் 150 ஸ்ட்ரைக்ரேட்டில், 60 ஆவரேஜில், 474 ரன்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில் திலக் வர்மாவுக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. தற்பொழுது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா மிக முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “மிடில் ஆர்டரில் சூரிய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா என செல்லவே நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது. திலக் வர்மாவை நம்பர் மூன்றில் விளையாட வைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு பிறகு பேட்டிங் செய்ய ஒருவரை அவர்கள் தேடுவதாக இருந்தால் அந்த இடத்துக்கு ரிங்கு சிங் மிகச்சரியானவர்.
இந்திய அணி நிர்வாகம் பெரும்பாலும் திலக் வர்மாவை கீழே விளையாட வைக்கத்தான் விரும்பும். ஏனென்றால் அவர்கள் அணியில் எடுத்துள்ள இரண்டு விக்கெட் கீப்பர்களும் மேலே விளையாட கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களை முதல் மூன்று இடங்களுக்குள் வைத்தால், திலக் கீழே இறங்க வேண்டியது இருக்கும். அதே சமயத்தில் இவருக்காக சூரிய குமாரை நம்பர் 4க்கு கீழே இறக்க முடியாது. அவர் மூன்று மற்றும் நான்கில் மிகச் சிறப்பாக தொடர்ந்து விளையாடு வருகிறார்.
எனவே ஹர்திக் பாண்டியாவுக்குப் பிறகு ஆறாவது இடத்தில் திலக் வருமா வருவாரா என்றால் அவரது தேர்வு சரியான ஒன்றாக இருக்காது. மேலும் அவர் ஐபிஎல் தொடரில் மேல் வரிசையில் வந்த பொழுதுதான் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பெங்களூரு அணிக்கு எதிராக 70 ரன்கள் எடுத்ததாக நினைக்கிறேன்.
அதற்குப் பிறகு கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மேலே ஆட வைக்க திலக் கீழே வந்து விளையாட வேண்டியதாக இருந்தது. அங்கும் அவர் நன்றாகவே பேட்டிங் செய்தார். இதைப்போலவே திலக்கை கீழ் வரிசையில் விளையாட வைப்பதாக இருந்தால் ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார்” என்று கூறியிருக்கிறார்.