இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவர்களுக்கு வாய்ப்புண்டு - பர்த்தீவ் படேல்!

Updated: Sun, Aug 14 2022 11:26 IST
Image Source: Google

இந்திய அணியில் கடந்த ஓராண்டாகவே ஏகப்பட்ட கேப்டன் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடி வந்தது. ஆனாலும் ரோஹித் சர்மாவுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதன் காரணமாக அவ்வப்போது இந்திய அணியில் கேப்டன் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஏற்கனவே ரிஷப் பந்த், ஹார்டிக் பாண்டியா, கேஎல் ராகுல், பும்ரா, தவான் என ஏகப்பட்ட வீரர்களுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீதும் விமர்சனம் இருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் எதிர்கால கேப்டன் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல் சில மனம் திறந்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஜஸ்பிரித் பும்ரா என்னுடைய தலைமையில் தான் குஜராத் அணிக்காக அறிமுகமாக இருந்தார். அதனால் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. நான் பார்த்த வகையில் பும்ரா பேட்ஸ்மேன்களை செட் செய்து விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர். அதேபோன்று ஒரு போட்டியில் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற யோசனையை அதிகமாக யோசிக்க கூடியவர். 

நிச்சயம் அவரிடம் டெஸ்ட் கேப்டனாகும் அனைத்து தகுதியும் இருக்கிறது. என்னை பொறுத்தவரை இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக பும்ரா தான் வருவார். ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20-யை பொருத்தவரை தற்போது ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இதில் பந்த் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் சிறந்த கேப்டனாக வர தகுதி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

அதோடு பாண்டியா தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் அசத்தலாக செயல்பட்டு வருவதாலும் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படுவது சரியாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். நிச்சயம் எதிர்காலத்தில் ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் அமைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை