மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பந்த்!

Updated: Wed, Jan 04 2023 15:28 IST
Rishabh Pant Being Shifted To Mumbai For Further Treatment, Confirms DDCA Director Shyam Sharma! (Image Source: Google)

உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது சொந்த ஊருக்கு டெல்லியில் இருந்து ரிஷப் பந்த் கடந்த வாரம் அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா்.

விபத்தை நேரில் பாா்த்த அரசு பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் அவரை மீட்டு ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. விபத்தைத் தொடா்ந்து ரிஷப் பந்தின் தாயாரிடம் பேசிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, சிகிச்சை செலவை மாநில அரசு முழுமையாக ஏற்கும் என்றாா். பந்துக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷப் பந்த் தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

படுகாயங்களுடன் தப்பியுள்ள ரிஷப் பந்துக்கு மருத்துவ சிகிச்சையும், ஓய்வும் தேவை என்பதால் இந்தாண்டின் முதல் பாதியில் அவா் மீண்டும் விளையாட வாய்ப்புகள் மிக குறைவு எனப்படுகிறது. எனவே, ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டி, பிப்ரவரியில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் போன்றவற்றில் ரிஷப் பந்த் விளையாட மாட்டாா் எனத் தெரிகிறது.

இந்நிலையில் காலில் ஏற்பட்ட காயத்துக்கு மும்பையில் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார் ரிஷப் பந்த். இத்தகவலை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநர் ஷ்யாம் சர்மா தெரிவித்துள்ளார். இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரிஷப் பந்த் மாற்றப்படுகிறார். எம்ஆர்ஐ  ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மும்பை மருத்துவமனையில் நடத்தப்படும். விரைவில் அவர் நலம் பெறுவார் என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை