ரிஷப் பந்த் குறித்து தகவல் வெளியிட்ட பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இன்று காலை உத்தராகண்ட் மாநிலத்தில் காரில் பயணித்தபோது விபத்தில் சிக்கினார். டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்புயில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக அவரை காரில் இருந்து மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளது. அதில் “பந்த், சக்ஷாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது” என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அவர் டேராடூன் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு தற்போது மாற்றப்பட்டு உள்ளதாகவும். அங்கு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் மேற்கொள்ளப்படும். பின்னர் சிகிச்சை குறித்த முடிவுகள் எடுக்கப்படும். பிசிசிஐ மருத்துவக் குழு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வர பிசிசிஐ பக்கபலமாக இருக்கும் என சொல்லியுள்ளது.