ரிஷப் பந்த் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி; காங்குலி கூறிய முக்கிய தகவல்!
கடந்த டிசம்பர் 30 அன்று உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா்.
உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது.
மேல்சிகிச்சைக்காக ரிஷப் பந்த் மும்பைக்கு மாற்றப்பட்டார். மும்பையில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவச் சிகிச்சைத் துறையின் தலைவர், மருத்துவர் தின்ஷாவின் மேற்பார்வையில் ரிஷப் பந்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்தால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரிஷப் பந்த் பற்றி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இயக்குநரும் இந்திய முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி, முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், “ரிஷப் பந்திடம் ஓரிரு முறை பேசியுள்ளேன். காயம் மற்றும் அறுவை சிகிச்சைகளின் காரணமாகக் கடினமான காலக்கட்டத்தில் அவர் உள்ளார். அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என வாழ்த்துகிறேன். ஒரு வருடத்துக்குள் அல்லது ஓரிரு வருடங்களில் இந்திய அணிக்காக ரிஷப் பந்த் மீண்டும் விளையாடுவார்” என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ரிஷப் பந்த் மீண்டும் விளையாட வருவார், ஒருநாள் உலகக் கோப்பையில் நிச்சயம் இடம்பெறுவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில் கங்குலியின் இந்தப் பதில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.