தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ரிஷப் பந்த் மாற்றம்!

Updated: Mon, Jan 02 2023 21:12 IST
Rishabh Pant Shifted To Private Suite From ICU Due To High Risk Of Infection, Says DDCA Director Shy (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், டெல்லியில் இருந்து டேராடூன் அருகேயுள்ள தனது சொந்த ஊருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.  விபத்தை நேரில் பாா்த்த அரசு பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் அவரை மீட்டு ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். 

பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. 

விபத்தைத் தொடா்ந்து ரிஷப் பந்தின் தாயாரிடம் பேசிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, சிகிச்சை செலவை மாநில அரசு முழுமையாக ஏற்கும் என்றாா். மேலும் பந்துக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

படுங்காயங்களுடன் தப்பியுள்ள ரிஷப் பந்துக்கு மருத்துவ சிகிச்சையும், ஓய்வும் தேவை என்பதால் இந்தாண்டின் முதல் பாதியில் அவா் மீண்டும் விளையாட வாய்ப்புகள் மிக குறைவு எனப்படுகிறது. எனவே, ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டி, பிப்ரவரியில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் போன்றவற்றில் ரிஷப் விளையாட மாட்டாா் எனத் தெரிகிறது.

இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷப் பந்த் தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிருமித் தொற்று அபாயம் காரணமாக ரிஷப் பந்தைத் தனி அறைக்கு மாற்றும்படி அவருடைய குடும்பத்தினரிடமும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் கூறினோம். தற்போது அவர் நலமாக உள்ளார். விரைவில் மீண்டு வருவார் என்று டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநர் ஷ்யாம் சர்மா கூறியுள்ளார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை