கோலியின் அட்வைஸ் தான் எனது ஃபார்மை மீட்டெடுக்க உதவியது - ரியான் பராக்!

Updated: Sat, Aug 05 2023 21:51 IST
கோலியின் அட்வைஸ் தான் எனது ஃபார்மை மீட்டெடுக்க உதவியது - ரியான் பராக்! (Image Source: Google)

அண்மை காலமாக விராட் கோலி வெறும் நட்சத்திர பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் இளம் வீரர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், பயிற்சியாளராகவும் மாறி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோருக்கு வழிகாட்டியயும் காண முடிந்தது.

அந்த வகையில் ஐபிஎல் தொடரின் ஏராளமான இளம் வீரர்கள் விராட் கோலியை சுற்றி நின்று பேசுவார்கள். அனைவருடனும் நிதானமாக பேசும் விராட் கோலி, அவர்களுக்கு பேட்டிங் குறித்து நுணுக்கங்களை கூறுவதாக சொல்லப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் ஏபி டிவில்லியர்ஸ் பேசுகையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது கிட்டத்தட்ட 8 வீரர்களை விராட் கோலி சுற்றி நின்றார்கள்.

அவர்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரு 30 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சி குறித்த ஒரு வகுப்பையே விராட் கோலி எடுத்தார் என்று கூறி இருந்தார். அனைத்து நாடுகளிலும் மரபு ரீதியான டெக்னிக்கை வைத்து விளாசிய விராட் கோலியின் வார்த்தைகளால் தான் இளம் வீரர் ரியான் பராக்கும் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளார்.

விராட் கோலி கொடுத்த அட்வைஸ் பற்றி ரியான் பராக் கூறுகையில், “6 மாதமாக நான் ஒரு அணுகுமுறையை பின்பற்றி வெற்றிபெறும் போது திடீரென வரும் சில தோல்விகளால், அந்த அணுகுமுறை தவறாகிடாது. ஐபிஎல் போன்று வேகமாக நடக்கும் தொடர்களில், இரு போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினாலே நம் திறமை மீது நாமே சந்தேகப்படுவோம். இங்கே அனைவரும் தவறு செய்கிறார்கள். நானும் டன் கணக்கில் தவறு செய்திருக்கிறேன்.

2 அல்லது 3 போட்டிகளில் மோசமாக விளையாடியதால், நம் அணுகுமுறை மற்றும் பயிற்சி முறைகளை மாற்ற வேண்டிய தேவையில்லை. உண்மை என்னவென்று பார்த்துவிட்டு, இது மோசமான காலகட்டம் என்பதை ஒப்புக்கொள். ஆனால் அதற்காக அணுகுமுறையில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையே இல்லை” என்று கூறியுள்ளார்.

அண்மையில் முடிவடைந்த தியோதர் கோப்பையில் 5 போட்டிகளில் விளையாடிய ரியான் பராக், 354 ரன்கள் விளாசியதோடு 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இரண்டு சதங்களை விளாசியதுடன், இறுதிப்போட்டியிலும் 95 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன் மூலம் நட்சத்திர ஆல்ரவுண்டராக ரியான் பராக் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை