PAK vs BAN : வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கம் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று நியூசிலாந்தில் தொடங்கியது. இன்று காலை நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 78 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஷா மசூத் 31 ரன்னும், பாபர் ஆசாம் 22 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் விளையாடியது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் மெஹதி ஹசன் மிராஸ் 10 ரன்களிலும், சபீர் ரஹ்மான் 14 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவில்லியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - அஃபிஃபி ஹொசைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அஃபிஃப் ஹொசைன் 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் மொசடெக் ஹொசைன் ரன் ஏதுமின்றி, நுருல் ஹசன் 8 விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய யாசிர் அலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்தார்.
இருப்பினும் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தரப்பில் முகமது வாசிம் ஜூனிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.