அஸ்வினுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? - டிராவிட்டின் பதில்

Updated: Wed, Jun 29 2022 23:35 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து இடையில் கடந்த ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் நான்கு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. கடைசிப் போட்டி கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அந்த ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டிதான் வரும் ஜூலை 1 முதல் 5ஆம் தேதிவரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா டிரா செய்தாலே, தொடரைக் கைப்பற்றிவிடும்.

இருப்பினும் இங்கிலாந்து அணி தற்போது முரட்டு பார்மில் இருப்பதால், இந்தியா கடுமையாக போராடினால் மட்டுமே டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்காக இந்தியா, கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் பங்கேற்றபோது, இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கரோனா உறுதியானது. அவருக்கு இன்னமும் கொரோனா நெகடிவ் என வரவில்லை. இதனால், ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது. இதனால், இந்திய அணிக்கு யார் கேப்டனாக இருப்பார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஜஸ்பரீத் பும்ராவை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 36 வருடங்களுக்குப் பிறகு சுனில் கவாஸ்கருக்கு அடுத்து ஒரு பௌலர் டெஸ்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் நாளை காலை ரோஹித்துக்கு கொரோனா நெகடிவ் என வந்தால், அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் இல்லையென்றால் நீக்கப்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித்துக்கு இன்று மதியம் கரோனா நெகடிவ் என வரவில்லை. இதனால், ரோஹித் பங்கேற்க வாய்ப்பு மிகமிக குறைவு எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் கரோனாவில் பாதிக்கப்பட்டு, பிறகு அணியில் இணைந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என ராகுல் திராவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த திராவிட், “அஸ்வினுக்கு சமீபத்தில் கொரோனா ஏற்பட்டது. இருப்பினும், பயிற்சி டெஸ்டின் கடைசி நாளில் இந்திய அணியில் இணைந்து சிறப்பாக பந்துவீசினார். அதன்பிறகும் பயிற்சியின்போது தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினார். அணியின் மருத்துவக் குழு அஸ்வின் குறித்து மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

இருப்பினும் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவரது பிட்னஸில் பிரச்சினை ஏற்பட்டால், 5 நாட்களும் தொடர்ந்து பங்கேற்க முடியாது. மருத்துவ குழு கொடுத்துள்ள அறிக்கையின்படி அஸ்வினால் 5 நாட்களும் சுறுசுறுப்பாக விளையாட முடியும் என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை