ரோஹித், விராட் கோலி பெரிய ரன்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!

Updated: Mon, Dec 25 2023 22:02 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா களமிறங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை சென்சூரியன் நகரில் துவங்குகிறது. 2025 உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெற உள்ள இத்தொடரை வென்று தென் ஆப்பிரிக்க மண்ணில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.

அந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் சீனியர்களாக இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது. ஏனெனில் வேகத்துக்கு சாதகமாக இருக்கக்கூடிய தென் ஆப்பிரிக்க மைதானங்களில் ஜெய்ஷவால், ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது அவ்வளவு சுலபமானதாக இருக்காது.

எனவே 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி பெரிய ரன்கள் குவித்த அவர்கள் இத்தொடரிலும் அதே ஃபார்மை தொடர்பாக என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் தென்னாபிரிக்க அணியில் அன்றிச் நோர்ட்ஜே காயத்தால் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ள நிலையில் ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோர் விளையாடுவதும் சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் பவுலிங் சற்று பலவீனமாக இருப்பதால் அதை தங்களுடைய அனுபவத்தால் வீழ்த்தி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் குவிப்பார்கள் என்று சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “அனைத்து இடங்களிலும் விளையாடிய அவர்கள் மிகவும் அனுபவம் மிகுந்த பேட்ஸ்மேன்கள். எனவே இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் நிறைய ரன்கள் அடிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். தற்போது அவர்கள் நல்ல திறமை கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்க அணியின் பவுலிங் அட்டாக் அந்தளவுக்கு மிரட்டலாக இல்லை. 

குறிப்பாக நோர்ட்ஜே விளையாட மாட்டார் என்ற சூழ்நிலையில் ரபாடா, லுங்கி இங்கிடி ஆகியோர் விளையாடுவதும் சந்தேகமாக பார்க்கப்படுகிறது. எனவே இம்முறை தென்னாபிரிக்க அணியின் பவுலிங் அட்டாக் சற்று அனுபவமற்றதாக தெரிகிறது. அதே சமயம் அவர்களிடம் கிளாஸ் இல்லை என்று நான் சொல்லவில்லை. எனவே இம்முறை இந்த 2 பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்கள் குவித்து இந்தியா பெரிய ஸ்கோர் குவிப்பதற்கு உதவுவார்கள் என்று கருதுகிறேன்” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை