மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 31ஆவது ஐபிஎல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. 
 
இதில், சாம் கரண் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் எடுத்தார். இதே போன்று, ஹர்ப்டீத் சிங் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் பந்து வீச்சில் க்ரீன் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் அதிர்ச்சி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 44 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். கேமரூன் க்ரீன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியாக டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் களத்தில் இருந்தனர்.

Advertisement

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2ஆவது பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. 3ஆவது பந்தை யார்க்கராக வீசி திலக் வர்மாவை கிளீன் போல்டாக்கினார். இதில், மிடில் ஸ்டெம்ப் பாதியாக உடைந்தது. அடுத்து 3 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 3 சிக்சர்கள் அடித்தால் மட்டுமே வெற்றி. அப்போது, இம்பேக்ட் பிளேயராக வந்த நேஹால் வதேரா களமிறங்கினார். 4ஆவது பந்தையும் யார்க்கராக வீசி வதேராவை கிளீன் போல்டாக்கினார் அர்ஷ்தீப் சிங் . அப்போதும் மிடில் ஸ்டெம்ப் உடைந்தது.

அடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் களமிறங்கினார். 5ஆவது பந்தில் ரன் எடுக்காத நிலையில், 6ஆவது பந்தில் மட்டுமே ஒரு ரன் எடுக்கப்பட, கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 3ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் 7 போட்டிகளில் விளையாடிய 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ரோஹித் சர்மா 250 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார். முதல் இந்திய வீரராக ஹிட்மேன் ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்களும், ஏபிடிவிலியர்ஸ் 251 சிக்ஸர்களும் அடித்துள்ளனர். இவர்களது வரிசையில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவதாக ரோஹித் சர்மா 250 சிக்ஸர்களுடன் இணைந்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News