ஐசிசி டி20 உலகக்கோப்பை: ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளை குவித்த ரோஹித் சர்மா!

Updated: Thu, Jun 06 2024 08:20 IST
ஐசிசி டி20 உலகக்கோப்பை: ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளை குவித்த ரோஹித் சர்மா! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச முடிவுசெய்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பேர், ஜார்ஜ் டக்ரேல் உள்ளிட்ட வீரர்கள் பெரிதளவில் ரன்களை சேர்க்க தவறி சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கரேத் டெலானி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அயர்லாந்து அணியானது 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் நட்சத்திர் வீரர் விராட் கோலி ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதன்பின் இணைந்த ரோஹித் சர்மா - ரிஷப் பந்த் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் ரோஹித் சர்மா தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 52 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா காயம் காரணமாக பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இருப்பினிம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். அதன்படி இப்போட்டியில் 52 ரன்களைக் குவித்த ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4026 ரன்கள் அடித்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாமை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தும் அசத்தியுள்ளார். 

அதேப்போல் இப்போட்டியில் 3 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை படைத்தும் அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐசிசி தொடர்களில் 100 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் எனும் சாதனையையும் ரோஹித் சர்மா தன்வசப்படுத்தியுள்ளார். மேற்கொண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 1000 ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் மற்றும் இரண்டாவது இந்தியர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். 

மேலும், இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறார். இதற்கு முன்பு தோனி இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி 41 வெற்றி பதிவுசெய்து முதலிடத்தில் இருந்த நிலையில், ரோஹித் சர்மா 42 வெற்றிகளை பதிவுசெய்து, கேப்டனாக சாதனை படைத்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இப்போட்டியின் வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரராக 300ஆவது வெற்றியையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை