கோலியின் ஒருநாள் கேப்டன்சியும் பறிப்பு - ரசிகர்கள் கொந்தளிப்பு!
இந்திய அணியின் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி. நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் டி20 கேப்டன்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதே வேளையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக நீடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ரசிகர்கள் டுவிட்டரில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
கோலியைப் போல் இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக எவரும் வழிநடத்தியது இல்லை எனவும், ரோஹித் நியமிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.
மேலும் விராட் கோலி 95 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து 65 போட்டிகளில் அணியை வெற்றியடைய வைத்துள்ளார். வெற்றி விகிதத்தில் 70 சதவீதத்திற்கு மேல் இருந்தும், அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களையும் உருவாக்கி தங்களது எதிர்ப்புகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.