எங்கள் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும் - ரோஹித் சர்மா!

Updated: Mon, Sep 23 2024 11:40 IST
Image Source: Google

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.  இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 114 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது  பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை குவித்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 119 ரன்களையும், ரிஷப் பந்த் 109 ரன்களையும் சேர்த்திருந்தனர். இதன்மூலம் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் அடித்து அசத்தினார். 

ஆனால் மற்ற வீரர்களில் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் வங்கதேச அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கி தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இந்தியாவில் விளையாடினாலும் வெளிநாடுகளில் விளையாடினாலும் நாங்கள் பந்துவீச்சில் வலுவாக இருக்க வேண்டும். சூழ்நிலை எப்படி இருந்தாலும் நாங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் எந்தவையான சூழல்களிலும் வேகப் பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.

இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றதற்கு எங்கள் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும்.  செம்மண் ஆடுகளம் எப்போதும் வித்தியாசமானதாக இருக்கும். அதனை புரிந்துகொண்டு விளையாட பொறுமை என்பது அவசியம். ஏனெனில் இங்கு நீங்கள் விளையாடும் போது ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்பது தெரியாது. இதுபோன்ற ஆடுகளங்களில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே பொறுமை என்பது தேவை.

Also Read: Funding To Save Test Cricket

அதற்கேற்றவாரே நாங்களும் பேட்டிங்கில் பொறுமையாக இருந்து ரன்களைச் சேர்த்ததுடன், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினோம்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன் பர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை