விண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மா படைக்கவுள்ள சாதனை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற இந்திய அணி கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் ரோஹித் சர்மா பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்திய ஒருநாள் அணிக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா, 2013ஆம் ஆண்டு தொடக்க வீரராக முக்கியத்துவம் பெற்றார். அன்றுமுதல் தொடக்க வீரர் என்றால் ரோஹித் சர்மா மட்டும்தான். அந்த அளவிற்கு ஒருநாள், டி20 போட்டிகளில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதுவரை 3 முறை இரட்டை சதத்தை விளாசி இருந்தாலும், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் உச்சத்தில் இருந்தது.
அந்த உலகக்கோப்பைத் தொடரில் மட்டும் 5 சதங்களை விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையையே சமன் செய்தார். இதுவரை 243 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 30 சதங்கள், 48 அரைசதங்கள், 3 இரட்டை சதங்கள் உட்பட 9,825 ரன்களை விளாசி தள்ளியுள்ளார். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 175 ரன்களை சேர்க்கும் பட்சத்தில் ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இதுவரை ஆயிரக்கணக்கான கிரிக்கெட் வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தாலும், 14 பேர் மட்டுமே 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். இந்த தொடரில் 175 ரன்களை சேர்த்தால், 10 ஆயிரம் ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் விளாசிய 15ஆவது வீரர் என்ற பெருமை ரோஹித் சர்மாவுக்கு கிடைக்கும். அதேபோல் இந்தியாவில் இருந்து இதுவரை சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி, தோனி, விராட் கோலி ஆகியோர் மட்டுமே 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.