அடுத்தடுத்த தொடர்களில் நிச்சயம் முன்னேற்றம் காண்பேன் -யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

Updated: Sat, Jan 06 2024 12:22 IST
அடுத்தடுத்த தொடர்களில் நிச்சயம் முன்னேற்றம் காண்பேன் -யஷஸ்வி ஜெய்ஸ்வால்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக கேப் டவுன் மைதானத்தில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதேபோல் தோனிக்கு பின் முதல் முறையாக ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா என்று பாதி அணியில் விளையாடிய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக விளையாடியவர்கள்.

இவர்களை கொண்டு இந்திய அணி டெஸ்ட் தொடரை சமன் செய்திருப்பது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் சேர்த்து 4 இன்னிங்ஸ்களில் பேட் செய்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் மொத்தமாக 50 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அறிமுக போட்டியிலே சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

இருப்பினும் 2ஆவது டெஸ்டின் 2ஆவது இன்னிங்ஸில் எந்த பயமும் இல்லாமல் அதிரடியில் பட்டையை கிளப்பினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். தென் ஆப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக விளையாடியது குறித்து ஜெய்ஸ்வால் பேசுகையில், “இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் நான் நல்ல மனநிலையுடன் விளையாடியதற்கு உதவியாக இருந்தார். கடைசி இன்னிங்ஸில் அதிரடியாக ரன்களை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

எப்போதும் சிறந்த தொடக்கம் கொடுக்க வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும். கடந்த 3 இன்னிங்ஸ் மட்டுமல்லாமல், 4ஆவது இன்னிங்ஸிலும் ஏதோ ஒன்றில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் என்று நினைக்கிறேன். இந்த சுற்றுப்பயணம் நிச்சயம் கற்றலுக்கான பயணமாக அமைந்தது. வேறு சூழலில் விளையாடுவது வித்தியாசமான உணர்வை அளித்தது. எங்கெல்லாம் முன்னேற வேண்டிய தேவை இருக்கிறது என்பதை அறிந்துள்ளேன். தென் ஆப்பிரிக்கா மண்ணில் பந்து வித்தியாசமாக வருகிறது. எல்லாவற்றையும் கொடுக்க தயாராக இருந்தேன்.

நிச்சயம் சவால் நிறைந்ததாக இருந்தது. அடுத்தடுத்து வெளிநாடுகளில் சந்திக்க போகும் சவால்கள் பற்றி அறிமுகத்தை அளித்தது. அடுத்தடுத்த தொடர்களில் நிச்சயம் முன்னேற்றம் காண்பேன். எனக்கென்று எந்த ஸ்டைலும் கிடையாது. என்னிடம் அட்டாக்கிங் கிரிக்கெட் மட்டுமே உள்ளது. சூழலுக்கு ஏற்ப அணி நிர்வாகத்தின் முடிவின் படி அணுகுமுறையை மாற்றி கொள்வேன். டெஸ்ட் போட்டியின் முதல் நாள் என்றால் வேறு மாதிரி பேட்டிங் செய்வேன். ஒருவேளை 4வது இன்னிங்ஸ் என்றால் வேறு மாதிரி விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை