இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச முடிவுசெய்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

Advertisement

அதிலும் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பேர், ஜார்ஜ் டக்ரேல் உள்ளிட்ட வீரர்கள் பெரிதளவில் ரன்களை சேர்க்க தவறி சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.  அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கரேத் டெலானி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Advertisement

இதனால் அயர்லாந்து அணியானது 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் சர்மா தனது அரைசதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா 26 ரன்களை கடந்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். 

இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 4038 ரன்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 4023 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா மேற்கொண்டு 38 ரன்களைச் சேர்க்கும் நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News