போட்டியில் தோற்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை- ரோஹித் சர்மா!

Updated: Sat, Sep 16 2023 12:47 IST
இந்த போட்டியில் தோற்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை- ரோஹித் சர்மா! (Image Source: Google)

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் இந்திய அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வங்கதேச அணி இந்திய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பாக சாஹிப் அல் ஹசன் 80 ரன்களையும், தாஹீத் ஹிரிடோய் 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 266 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி வங்கதேச அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த போட்டியில் நாங்கள் மற்ற வீரர்களுக்குமே போட்டியில் விளையாட ஒரு வாய்ப்பினை வழங்க நினைத்தோம். அதன் காரணமாகவே இன்றைய போட்டியில் நிறைய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. எதிர்காலத்தை முன்னில் வைத்தே நாங்கள் இந்த முடிவினை எடுத்து இருந்தோம்.

மற்றபடி இந்த போட்டியில் தோற்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதேபோன்று இந்த போட்டியில் நாங்கள் எந்த ஒரு காம்ப்ரமைசும் செய்யவில்லை. உலகக் கோப்பை தொடரில் விளையாடப் போகும் வீரர்களுக்கு சில வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதன் காரணமாகவே அணியில் பல மாற்றங்கள் இருந்தன.

அக்ஸர் பட்டேல் மிக சிறப்பாக விளையாடியும் இந்த போட்டியை அவரால் முடித்துக் கொடுக்க முடியாமல் போனது. ஆனாலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதே வேளையில் வங்கதேச அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். ஷுப்மன் கில் அருமையான சதத்தை அடித்து மீண்டும் தனது அட்டகாசமான ஃபார்மினை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரால் எப்படி விளையாட முடியும் என்பதை இந்த தொடர் முழுவதுமே அவர் நிரூபித்துக் காட்டி உள்ளார். அதோடு கடந்த ஒரு வருடமாக அவரது ஆட்டம் புதுப்பந்தில் மிகச் சிறப்பாக இருக்கிறது. இதற்காக அவர் எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டாம் அவரிடம் இயல்பாகவே நல்ல ஆட்டம் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை