ENG vs IND: சிறுமியைத் தாக்கிய ரோஹித்தின் சிக்ஸர்!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பும்ராவின் அபாரமான பவுலிங்கில் மண்டியிட்டு சரணடைந்தது. 25.2 ஓவரில் வெறும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பும்ரா அபாரமாக பந்துவீசி 7.2 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது பெஸ்ட் பவுலிங்கை பதிவு செய்தார்.
இதையடுத்து 111 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி இலக்கை எட்டினர். அதன்படி 18.4 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
பொதுவாக அசால்ட்டாக சிக்ஸர்களை அடிப்பதில் வல்லவரான ரோஹித் சர்மா, இந்த போட்டியிலும் சில சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஷார்ட் பிட்ச் பந்துகளை சிக்ஸர் அடிப்பது ரோஹித்துக்கு கை வந்த கலை. அந்தவகையில், இன்னிங்ஸின் 5ஆவது ஓவரில் டேவிட் வில்லி வீசிய அந்த ஓவரின் 3ஆவது பந்தை தனது டிரேட்மார்க் புல் ஷாட்டை ஆடி சிக்ஸர் விளாசினார்.
ரோஹித் சிக்ஸர் அடித்த அந்த பந்து, ஸ்டேடியத்தில் இருந்த ஒரு சிறுமியை தாக்கியது. ரோஹித்தின் சிக்ஸரில் அடி வாங்கிய அந்த சிறுமி வலியால் துடிக்க, அவரை அழைத்துவந்தவரும், மற்றவர்களும் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.
மேலும் உடனடியாக இங்கிலாந்து அணியின் மருத்துவர்கள் அந்த சிறுமிக்கு மருத்துவ சிகிச்சையளித்தனர். இதனால் ஆட்டம் சற்று நேரம் தாமதமானது.