தேவை ஏற்படும் போதெல்லாம் பேட்டிங் வரிசையை மாற்றுவேன் - ரோஹித் சர்மா!

Updated: Fri, Jul 28 2023 15:56 IST
தேவை ஏற்படும் போதெல்லாம் பேட்டிங் வரிசையை மாற்றுவேன் - ரோஹித் சர்மா! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றப் பிறகு, தற்போது இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் அணியில் யாருமே அரை சதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 43 ரன்களை அடித்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் 114/10 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில், கில் 7 ரன்களை மட்டும் சேர்த்து நடையைக் கட்டினார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 19 , ஹார்திக் பாண்டியா 5 , ஷர்தூல் தாகூர் 1 ஆகியோரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.

இருப்பினும், மறுமுனையில் இஷான் கிஷன் 52 ரன்களை குவித்து அசத்தினார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16, கேப்டன் ரோஹித் சர்மா 12 ஆகியோர் களத்தில் இருந்தபோது, இந்தியா 22.5 ஓவர்களில் 118/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. விராட் கோலி இப்போட்டியில் களமிறக்கப்படவில்லை. ரோஹித் சர்மா தொடக்க வீரராக அல்லாமல், 7ஆவது இடத்தில் விளையாடினார்கள்.

இப்போட்டி முடிந்தப் பிறகு  பேசிய ரோஹித் சர்மா, ''பிட்ச் இப்படி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்களுக்கான பிட்ச் இது. இன்று நான் 7ஆவது இடத்தில் களமிறங்கினேன். இந்திய அணிக்காக முதல்முறையாக நான் 7ஆவது இடத்தில் களமிறங்கியதை, இது நியாபகப்படுத்தியது.

இனி வரும் போட்டிகளிலும் இதேபோல், பேட்டிங் வரிசை மாற்றப்படுமா எனக் கேட்டதற்கு, ''நிச்சயம் இருக்கும். தேவை ஏற்படும் போதெல்லாம், இப்படி பேட்டிங் வரிசையை மாற்றுவேன். முகேஷ் குமார் சரியான வேகத்தில் பந்துகளை சிறப்பாக ஸ்விங் செய்து அசத்தினார். அனைத்து பௌலர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இஷான் கிஷன் பேட்டிங்கில் அபாரமாக விளையாடினார்'' என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை