ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் இருப்பது முக்கியம் - ரோஹித் சர்மா!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்களுக்கு மத்தியில், முன்னணியில் நிற்பதற்காக இந்திய ஆயுதப்படைகளைப் பாராட்டிய இந்திய ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா, குடிமக்கள் எந்தவொரு போலிச் செய்திகளையும் பரப்புவதையோ அல்லது நம்புவதையோ தவிர்க்குமாறு வலியுறுத்திவுள்ளார்.
நேற்றைய தினம், ஜம்மு மற்றும் மேற்கு எல்லைக்கு அருகிலுள்ள பல இராணுவ நிலையங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, ஆனால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. இதனையடுத்து பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்ததற்காக இந்திய இராணுவ படைகளுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் சமூக வலைதண்க்கள் மூலம் பராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் தனது சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்தி செய்தியினை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளிலும், நமது இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது வீரர்கள் நமது நாட்டின் பெருமைக்காக உயர்ந்து நிற்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் இருப்பது முக்கியம், மேலும் எந்தவொரு போலி செய்தியையும் பரப்புவதையோ அல்லது நம்புவதையோ தவிர்க்க வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் இந்த சமூக வலைதள பதிவானது தற்சமயம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலில் 25 இந்தியர்கள் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடக்கது.
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் நேற்றைய நாட்டின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.