ரோஹித்தை பாராட்டுவது போல் கோலியை மறைமுகமாக சாடிய கௌதம் கம்பீர்!

Updated: Mon, Sep 18 2023 13:58 IST
ரோஹித்தை பாராட்டுவது போல் கோலியை மறைமுகமாக சாடிய கௌதம் கம்பீர்! (Image Source: Google)

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய நடப்பு சாம்பியன் இலங்கையை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 8ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

அதே போல 2 ஆசிய கோப்பைகளை (2018, 2023) வென்ற இந்திய கேப்டன் என்ற முகமது அசாருதீன் மற்றும் எம்எஸ் தோனியின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஏனெனில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதால் சர்ச்சைக்குரிய முறையில் விராட் கோலி பதவி விலகிய பின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் படுதோல்வியை சந்தித்தது.

மேலும் சமீப காலங்களில் சுமாரான ஃபிட்னஸ் கடைப்பிடிக்கும் அவர் பேட்டிங்கிலும் தடுமாறியதால் இதற்கு பேசாமல் விராட் கோலியே கேப்டனாக இருந்திருக்கலாம் என்று நிறைய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ரோஹித் சர்மாவாவது 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார் ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வெல்லவில்லை என்று விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், “ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் எப்போதும் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வென்றதில்லை. இருப்பினும் ரோஹித்துக்கு உண்மையான சோதனை 15 நாட்களில் காத்திருக்கிறது. ஏனெனில் உங்களிடம் தற்போது இந்திய அணியில் 15 – 18 சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்றனர். 

அவர்களை வைத்து கோப்பையை வெல்ல முடியாமல் போனால் உங்கள் மீது கேள்விகள் எழும். பொதுவாக ஒவ்வொரு உலகக் கோப்பை முடிந்த பின்பும் அதை வெல்ல முடியாவிட்டால் கேப்டன் மீது கேள்விகள் வரும். அதை விராட் கோலியும் சந்தித்தார். 2007இல் ராகுல் டிராவிட்டும் கேள்விகளை சந்தித்தார். அதே போல 2023 உலக கோப்பையை இந்தியா வெல்ல முடியாவிட்டால் ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் மீது அதிகமான கேள்விகள் வரும். இருப்பினும் இந்த அணி உலகக் கோப்பை வெல்லும் அளவுக்கு தகுதி உடையதாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை