அவர்களுக்காக நாங்கள் வெளியேற வேண்டுமா? - ரோஹித் சர்மாவின் நகைச்சுவை பதில்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஒருநாள் தொடருக்காக அகமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சைனி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஆமதாபாத்தில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மாவும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குகிறார்கள்.
இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அப்போது, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, “உங்களுக்கு இஷான் கிஷனும் ருதுராஜ் கெயிக்வாடும் தொடக்க வீரர்களாக இருக்கவேண்டும். நானும் ஷிகர் தவனும் அணியிலிருந்து வெளியேற வேண்டுமா (என்று சொல்லி சிரித்தார்). இளம் வீரர்களுக்கு நிச்சயம் வாய்ப்பளிக்கப்படும் என்றார்.
நம் அணியின் முதல் மூன்று பேட்டர்கள் பல வருடங்களாக நன்றாக விளையாடி வருகிறார்கள். இளம் பேட்டர்களுக்கு வருங்காலத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். நன்றாக விளையாடியவர்கள் நிச்சயம் வாய்ப்பு பெறுவார்கள். ஷிகர் தவனும் ருதுராஜும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.