கோலி இல்லாமலே ஆசிய கோப்பையை ரோஹித் வென்றுள்ளார் - சவுரவ் கங்குலி!

Updated: Mon, Dec 13 2021 14:30 IST
Rohit win Asia Cup without Kohli, says Sourav Ganguly (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து புதிய கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி எதிர்கொண்டது. அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியா கோப்பையை கைப்பற்றியது. கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ரோஹித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த சூழலில் திடீரென இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ திடீரென அறிவித்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக மறுத்ததாக கூறப்படுகிறது. அப்படி உள்ள சூழலில் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கம் அளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ‘டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு தனித்தனி கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது என்று தேர்வுக்குழு முடிவு எடுத்தது. அதனால்தான் டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக வேண்டாம் என்று வலியுறுத்தினோம். ஆனால் அவர் அதை கேட்காததால், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என அவர் கூறினார்.

இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து சவுரவ் கங்குலி பேசியுள்ளார். அதில், “ரோஹித் சர்மா மீது முழு நம்பிக்கை இருந்ததால்தான் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 

இது சாதாரண விஷயம் இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆசியா கோப்பை தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா தான் வழிநடத்தினார். அந்த தொடரில் விராட் கோலி இல்லாமலே கோப்பையை வென்று கொடுத்தார்” என கூறினார்.

இதன்மூலம் விராட் கோலி இல்லாமலும் விளையாட முடியும் என சவுரவ் கங்குலி மறைமுகமாக கூறுவதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை