ZIM vs IRE 3rd T20I: ரியான் பர்ல் கேமியோவால் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஜிம்பாப்வே!

Updated: Sun, Jan 15 2023 20:24 IST
Ryan Burl's brilliant cameo and Craig Ervine's half-century take Zimbabwe to a series victory! (Image Source: Google)

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் கேப்டன் பால்பிர்னி 9, ரோஸ் அதிர் 1, ஸ்டீபன் தொஹனி 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஹாரி டெக்டர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அவருடன் இணைந்து விளையாடிய கர்டிஸ் கேம்பர் 27 ரன்களையும், ஜார்ஜ் டக்ரெல் 23 ரன்களையும் அடித்து பங்களித்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாரி டெக்டர் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெஸ்லி மதவெரே பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினார்.

இதனையடுத்து களமிறங்கிய அயர்லனது பேட்டர்களால் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது.ஜிம்பாப்வே தரப்பில் வெஸ்லி மதவெரே, டெண்டாய் சதாரா, லுக் ஜோங்வா, ரியான் பர்ல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் மருமணி 5 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த இன்னசெண்ட் கையா - கேப்டன் கிரெய்க் எர்வின் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் கையா 23 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வெஸ்லி மதவெரே, டோனி முன்யோங்கா ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கிரேய்க் எர்வின் அரைசதம் கடந்த கையோடு 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரியான் பர்ல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 11 பந்துகளில் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியையும் வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது. 

இப்போட்டியில் வெற்றிக்கு காரணமாகவும், ஜிம்பாப்வே அணி தொடரை வெல்வதற்கு உறுதுணையாகவும் இருந்த ரியான் பர்ல் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை