தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தும் வரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் - ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய திலக்வர்மாவும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சாய் சுதர்ஷனுடன் இணைந்த கேப்டன் கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய  சாய் சுதர்ஷன் அரைசதம் கடந்தார். இதன்மூலம் தனது முதலிரண்டு போட்டிகளில் அரைசதம் கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் சாய் சுதர்ஷன் பெற்றார். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 62 ரன்களை எடுத்திருந்த சாய் சுதர்ஷன் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

இருப்பினும் மறுப்பக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேஎல் ராகுல் அரைசதம் கடந்த நிலையில், 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரிங்கு சிங் 17, அக்ஸர் படேல் 7 ரன்கள் என ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களாலும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் இந்திய அணி 46.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பர்கர் 3 விக்கெட்டுகளையும், பியூரன் ஹென்றிக்ஸ், கேசவ் மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி டோனி டி ஸார்ஸி - ரீஸா ஹென்றிக்ஸ் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

Advertisement

அதன்பின் 52 ரன்கள் எடுத்திருந்த ரீஸா ஹென்றிக்ஸ் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி டி ஸோர்ஸி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 42.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டோனி டி ஸோர்ஸி 9 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 119 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News