இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளும் கடைசி மற்றும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று கேப்டவுன் நகரில் நேற்று தொடங்கியது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி  ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக மொகமது சிராஜின் வேகப் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்டர்கள் நிலைகுலைந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாகவே கைல் வெர்ரைன் 15 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 12 ரன்களையும் எடுத்தனர். 

Advertisement

மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெஸ்வால் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா 39 ரன்களிலும், ஷுப்மன் கில் 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதன்பின் களமிறங்கிய விராட் கோலி வழக்கம்போல் தனது பணியை செய்ய மறுபக்கம் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் விராட் கோலி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அப்போது இன்னிங்ஸின் 34ஆவது ஓவரை வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி வீசினார். 

அதனை எதிர்கொண்ட கேஎல் ராகுல் அடிக்க முயன்று 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரையும் அதே ஓவரில் வீழ்த்தி லுங்கி இங்கிடி கம்பேக் கொடுத்தார். இதையடுத்து அடுத்த ஓவரை வீசிய காகிசோ ரபாடா, அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த விராட் கோலி 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 46 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் வந்த சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும் அதே ஓவரில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. முன்னதாக இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் அடுத்து 6 விக்கெட்டுகளில் எந்த ஒரு ரன்னையும் எடுக்கமால் விக்கெட்டை இழந்தது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஸ்கோரில் அதிக விக்கெட்டுகளை இழந்த அணி எனும் மோசமான சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது. 

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, நந்த்ரே பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 98 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக ஐடன் மார்கர்ம் - டீன் எல்கர் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் தனது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வந்த டீன் எல்கர் 12 ரன்கள் எடுத்த நிலையில் முகேஷ் குமார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டோனி டி ஸோர்ஸி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் மார்க்ரமுடன் இணைந்த டேவிட் பெட்டிங்ஹாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். 

Advertisement

இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களை எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஐடன் மார்க்ரம் 36 ரன்களுடனும், டேவிட் பெட்டிங்ஹாம் 7 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பெட்டிங்ஹாம் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்கோ ஜான்சென் 11 ரன்களிலும், கேசவ் மகாராஜ் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஐடன் மார்க்ரம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்ததுடன், அணிக்கு முன்னிலையையும் பெற்றுக்கொடுத்தார். பின் 17 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 106 ரன்களை எடுத்திருந்த மார்க்ரம் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய காகிசோ ரபாடா 6 ரன்களிலும், லுங்கி இங்கிடி 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் 11 ரன்களுக்கும், நட்சத்திர வீரர் விராட் கோலி 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

இருப்பினும் இந்திய அணி 12 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன்செய்துள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் இலக்கை எட்டிய அணி எனும் சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது. மேலும் கேப்டவுனில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்த முதல் ஆசிய அணி எனும் பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News