SA vs IND, 3rd Test: கோலி, புஜாரா நிதானம்; இந்திய அணி முன்னிலை!

Updated: Wed, Jan 12 2022 22:03 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 2ஆம் நாள் தேநீர் இடைவேளை முடிந்த சிறுதி நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இழந்து 210 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது.

இதில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்குர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ரகுல் - மயங்க் அகர்வால் இணை சிறப்பாக தொடங்கினர். 

ஆனால் 7 ரன்கள் எடுத்திருந்த மயன்க் அகர்வால் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கேஎல் ராகுலும் 10 ரன்களில் ஜான்சனிடம் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி - சட்டேஸ்வர் புஜாரா இணை மேற்கொண்டு விக்கெட் ஏதும் இழக்காமல் தடுத்தனர். 

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களைச் சேர்த்தது. விராட் கோலி 14 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இதன்மூலம் 70 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை