மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட் அசத்தல் - இந்தியாவை வீழ்த்தி ஆஸி வெற்றி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஷுப்மன் கில் 5 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், திலக் வர்மா ரன்கள் ஏதுமின்றியும், அக்ஸர் படேல் 7 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - ஹர்ஷித் ரானா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்ஷித் ரானா தனது பங்கிற்கு 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 35 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அபிஷேக் சர்மாவும் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 68 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர்.
இதனால் இந்திய அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கியதுடன், முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
இதில் டிராவிஸ் ஹெட் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 28 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷும் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 46 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு டிம் டேவிட் ஒரு ரன்னிலும், ஜோஷ் இங்கிலிஸ் 20 ரன்னிலும், மிட்செல் ஓவன் 14 ரன்னிலும், மேத்யூ ஷார்ட் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் சேவியர் பார்ட்லெட் இணை இறுதிவரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Also Read: LIVE Cricket Score
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் இலக்கை எட்டியது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.