தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று (நவம்பர் 15) ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை மீண்டும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

Advertisement

இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 73 ரன்களைக் கடந்த நிலையில், ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்த சஞ்சு சாம்சன், இப்போட்டியில் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அவருடன் இணைந்த திலக் வர்மா கடந்த போட்டியில் எங்கு விட்டாரோ அதே அதிரடியை இப்போட்டியிலும் தொடர்ந்ததுடன், அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த திலக் வர்மா 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததன் மூலம் இந்திய அணியின் ஸ்கோரும் 200 ரன்களைத் தாண்டியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். இந்த தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். 

அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த திலக் வர்மா 41 பந்துகளில் தனது இரண்டாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைக் கடந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 6 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 109 ரன்களையும், திலக் வர்மா 9 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 120 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியானது ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 283 ரன்களைக் குவித்தது. இதில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா இருவரும் இணைந்து 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 
 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News