தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ரியான் ரிக்கெல்டன், கைல் வெர்ரைன் ஆகியோரது சதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக கைல் வெர்ரைன் 105 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 101 ரன்களையும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணியில் திமுத் கருணரத்னே 20 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 44 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்கா 89 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 44 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 48 ரன்களை எடுத்த கையோடு கமிந்து மெண்டிஸும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

Advertisement

பின்னர் களமிறங்கிய கேப்டன் தனஞ்செயா டி சில்வா 14 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 16 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய பிரபாத் ஜெயசூர்யா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளியும், மார்கோ ஜான்சென், கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் முன்னிலையும் பெற்றது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் அப்பிரிக்க அணியில் டோனி டி ஸோர்ஸி 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்த நிலையில், 55 ரன்னிலும், அடுத்து வந்த ரியான் ரிக்கெல்டன் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் டெம்பா பவுமா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து 66 ரன்களைச் சேர்த்த நிலையில் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 317 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனல் இலங்கை அணிக்கு 348 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணியில் திமுத் கருணரத்னே ஒரு ரன்னிலும், பதும் நிஷங்கா 18 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய தினேஷ் சண்டிமால் - ஏஞ்சலோ மேத்யூஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சண்டிமால் 29 ரன்னிலும், அதிரடியாக விளையாட முயற்சித்த ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அவர்களைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸும் 35 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து இணைந்த கேப்டன் தனஞ்செயா டி சில்வ - குசால் மெண்டிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தை தனஞ்செயா டி சில்வா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் தலா 39 ரன்களுடன் தொடர்ந்தனர். இதில் தனஞ்செயா டி சில்வ தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 50 ரன்னில் விக்கெட்டை இழக்க மறுபக்கம் குசால் மெண்டிஸும் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாத காரணத்தால் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 238 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேஷவ் மஹாராஜ் 5 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, டேன் பீட்டர்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக டேன் பீட்டர்சனும், தொடர் நாயகன் விருதை டெம்பா பவுமாவும் கைப்பற்றி அசத்தினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News