SA vs WI, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து தற்பொழுது விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான சுற்றுப் பயணத்தின் இறுதி தொடராக தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று தொடரில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவாது டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார்கள்.
அந்த அணியின் கையில் மேயர்ஸ் 27 பந்தில் 51 ரன்கள், கேப்டன் ரோமன் பாவெல் 18 பந்தில் 41 ரன்கள் எடுக்க, மூன்றாவது வீரராக வந்த ஜான்சன் சார்லஸ் 39 பந்தில் அதிரடி சதம் அடித்து தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்களை வதம் செய்தார். இதில் மொத்தம் பத்து பவுண்டரி 11 சிக்ஸர்கள் அடக்கம்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 258 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் 39 பந்துகளில் சதமடித்ததன் மூலம் ஜான்சன் சார்லஸ் அதிவேக டி20 சர்வதேச சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை பெற்றார். தென் ஆப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இமாலய் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஜோடி குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்றிக்ஸ் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திருப்பி ஒரு மிகப்பெரிய பதிலடி தர ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி இப்படி விளையாடும் என்று வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது இந்தப் போட்டியை பார்த்த யாருமே நம்பி இருக்க மாட்டார்கள்.
வெறும் 15 பந்துகளில் அரை சதத்தை கடந்து குறைந்த பந்தில் டி20 சர்வதேச போட்டியில் சதம் அடித்த தென் ஆபிரிக்க வீரர் என்ற சாதனையை குயிண்டன் டி காக் பெற்றார். தொடர்ந்து இருவரும் அபாரமாக விளையாட, இந்த ஜோடி இணைந்து பவர் பிளேவான முதல் ஆறு ஓவர்களில் 102 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தது. இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு ஓவர்களில் 98 ரன்கள் எடுத்தது உலக சாதனையாக இருந்தது. தற்பொழுது இதை தென் ஆப்பிரிக்கா அணி முறியடித்து இருக்கிறது.
அதன்பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் 43 பந்துகளி சதமடித்து அசத்தினார். அதன்பின் 9 பவுண்டரி, 8 சிக்சர்களை விளாசி 100 ரன்களை சேர்த்திருந்த குயின்டன் டி காக் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரைலீ ரூஸோவும் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதன்பின் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 68 ரன்களைச் சேர்த்திருந்த ஹென்றிக்ஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேவிட் மில்லரும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 38 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதேசமயம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை எட்டிய முதல் அணி என்ற சாதனையையும் தென் ஆப்பிரிக்க அணி படைத்துள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டி காக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.