எஸ்ஏ20 2025: பிரிட்டோரியஸ், ரூட் அசத்தல்; சன்ரைசர்ஸை பந்தாடியது ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜோர்டன் ஹார்மன் மற்றும் ஸாக் கிரௌலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் பொறுப்புடன் விளையாடி முதல் விக்கெட்டிற்கு 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் 27 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஸாக் கிரௌலி தனது விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜோர்டன் ஹார்மனும் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் அபெல் மற்றும் கேப்டன் ஐடன் மார்க்ரம் இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.
இதில் 20 ரன்களைச் சேர்த்த கையோடு டாம் அபெல் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஐடன் மார்க்ரம் தனது அரைசத்ததைப் பதிவுசெய்தார். அவருக்கு துணையாக டிரிஸ்டன் ஸ்டப்ஸும் பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலிமையான நிலையை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 82 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் மார்கோ ஜான்சன் 4 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 28 ரன்களை எடுத்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் குவேனா மபாகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு ஜோ ரூட், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் அணியின் வெற்றிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய பிரிட்டோரியஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரிட்டோரியஸ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 97 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் ஜோ ரூட்டுடன் இணைந்த கேப்டன் டேவிட் மில்லரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தியது 62 ரன்களையும், கேப்டன் டேவிட் மில்லர் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ச் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி வெற்றிபெறது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.