எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 28 ரன்களில் வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!

Updated: Wed, Jan 15 2025 09:19 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபாஃப் டூ பிளெசிஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கான்வேவுடன் இணைந்த லியுஸ் டு ப்ளூய் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இவரும் அபாரமாக விளையாடிய நிலையில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. பின் 22 ரன்களைச் சேர்த்த நிலையில் டெவான் கான்வே தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த லியுஸ் டு ப்ளூயும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களுடன் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் வியான் லுப் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் வேகமும் குறையத்தொடங்கியது. இதில் வியான் லூப் 17 ரன்களுக்கும், நிதானமாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய டொனோவன் ஃபெரீராவும் தனது பங்கிற்கு 26 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் டேவிட் வைஸும் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஜெரால்ட் கோட்ஸி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்துள்ளது. டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் பிரெனலன் சுப்ராயென், கேசவ் மஹாராஜ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. 

அந்த அணியின் தொடக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கீ 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான பிராண்டன் கிங் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய குயின்டன் டி காக் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுமுனையில் விளையாடிய வியான் முல்டர், ஜேசன் ஸ்மித் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் டி காகுடன் இணைந்த ஹென்ரிச் கிளாசெனும் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினார். இதில் டிக் காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசென் 29 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ், கேஷவ் மஹாராஜ், பிரெனலன் சுப்ராயென் உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் 55 ரன்களில் குயின்டன் டி காக்கும் ஆட்டமிழக்க, சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை