எஸ்ஏ20 2025: ஹென்றிக்ஸ், பிரீவிஸ் அதிரடியில் கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது எம்ஐ கேப்டவுன்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரியான் ரிக்கெல்டன் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 30 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய காலின் இங்ராமும் 16 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரிஸா ஹென்றிக்ஸ் மற்றும் டெவால்ட் பிரீவிஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ரீஸா ஹென்றிக்ஸ் 31 பந்துகளிலும், டெவால்ட் பிரீவிஸ் 23 பந்துகளிலும் என அடுத்தடுத்து தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரீஸா ஹென்றிக்ஸ் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 77 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் தலா 6 பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு 73 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைக் குவித்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் டாம் ரோஜர்ஸ், செனுரன் முத்துசாமி மற்றும் பீட்டர்ஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு வில் ஜேக்ஸ் - ஸ்டீவ் ஸ்டால்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் ஸ்டால்க் 13 ரன்களில் நடையைக் கட்ட அடுத்து களமிறங்கிய வில் ஸ்மீத் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஸ்மீத் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய கைல் வெர்ரைன் ஒரு ரன்னிலும், அக்கர்மேன் 8 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த வில் ஸ்மித்தும் 52 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆஷ்டன் டர்னர் மற்றும் கீகன் லயன் கேஷெட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஆஷ்டன் டர்னர் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் கீகன் லயன் கேஷெட் 34 ரன்களையும், செனுரன் முத்துசாமி 12 ரன்களை சேர்த்த நிலையிலும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. கேப்டவுன் அணி தரப்பில் கார்பின் போஷ், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த தோல்வியின் மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்தது.