எஸ்ஏ20 2025: ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்ஐ கேப்டவுன்!

Updated: Wed, Feb 05 2025 08:46 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் முன்னேறிவுள்ளன. அதன்படி இத்தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணியும், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அதன்படி கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய எம்ஐ கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் மற்ற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தி கொடுத்தனர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 87 ரன்களைத் தாண்டியது, 

அதன்பின் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டெவால் பிரீவிஸ் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய செதிகுல்லா அடல் ரன்கள் ஏதுமின்றியும், அதிரடியாக விளையாடிய ஜார்ஜ் லிண்டே 3 சிக்ஸர்களுடன் 26 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெவால் பிரீவிஸ் 4 சிக்ஸர்களுடன் 44 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய டெலானோ போட்ஜீட்டர் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 20 ஓவர்கள் மிடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களைக் குவித்துள்ளது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளையும், தயான் கலீம், பிஜோர்ன் ஃபோர்டுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணிக்கு லுஹான் ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் மிட்செல் ஓவன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடிய பிரிட்டோரியஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் ஓவனும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ருபின் ஹெர்மான், தயான் கலீம் மற்றும் துனித் வெல்லாலகே உள்ளிட்டோரும் அடுதடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டேவிட் மில்லர் மற்றும் தினேஷ் கார்த்திக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடிய நிலையில் ராயல்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பும் அதிகரித்தது. அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் மில்லர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனையடுத்து களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழக்க, ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எம்ஐ கேப்டவுன் தரப்பில் டிரென்ட் போல்ட், காகிசோ ரபாடா, கார்பின் போஷ், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், எஸ்ஏ20 லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முதல் முறையாக முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை