எஸ்ஏ20 2025 குவாலிஃபையர் 2: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - மிட்செல் ஓவன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் ஓவன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பிரிட்டோரியஸுடன் இணைந்த ருபின் ஹர்மன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
இருவரும் அதிரடியாக விளையாடி தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 59 ரன்களைச் சேர்த்த நிலையில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் டேவிட் மில்லர் 6 ரன்களுக்கும், தினேஷ் கார்த்திக் 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஆண்டிலே பெஹ்லுக்வாயோ ஓரளவு தாக்குப்பிடித்து ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்தார்.
மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருபின் ஹர்மன் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் கிரெய்க் ஓவர்டன், மார்கோ ஜான்சன், ஓட்னீல் பார்ட்மேன், ஐடன் மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டார்ன் கேப் அணியில் தொடக்க வீரர் டேவிட் பெடிங்ஹாம் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டோனி டி ஸோர்ஸி மற்றும் ஜோர்டன் ஹர்மனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டோனி டி ஸோர்ஸி 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 78 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் ஹர்மனுடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரமும் நிதானமாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோர்டன் ஹர்மன் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 69 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது மூன்றாவது முறையாக எஸ்ஏ20 லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.