எஸ்ஏ20 2025: மார்க்ரம், ஜான்சன், டௌசன் அபாரம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் டேவிட் பெடிங்ஹாமும் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டாம் அபெல் 6 ரன்களுக்கும், ஜோர்டன் ஹார்மன் 9 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 53 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் மார்கோ ஜான்சன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்திருந்த மார்கோ ஜான்சன் விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் 49 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் அதிரடி காட்ட தொடங்கிய மார்க்ரம் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய லியாம் டௌசனும் சிக்ஸர்களை பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இறுதியில் லியாம் டௌசன் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர் என 25 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஐடன் மார்க்ரம் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஈதன் போஷ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியானது ஆரம்பம் முதலே எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் வில் ஜேக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரைலீ ரூஸோவ் ரன்கள் ஏதுமின்றியும், கைல் வெர்ரைன் 11 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த மார்கஸ் அக்கர்மேன் - கீகன் லயன் கேஷெட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். பின்னர் அக்கர்மேன் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 28 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 16.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 97 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் தரப்பில் மார்கோ ஜான்சன் 4 விக்கெட்டுகளையும், லியாம் டௌசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.