எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கெபெர்ஹாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய குயின்டன் டி காக், ஜேஜே ஸ்மட்ஸ், வியான் முல்டர், ஹென்ரிச் கிளாசென், கேப்டன் கேசவ் மஹாராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் நிதானமாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் 44 ரன்களுக்கு விக்கெட்டினை இழந்த நிலையில், இறுதியில் நவீன் உல் ஹக் அதிரடியாக விளையாடி15 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிர்கு 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் மார்கோ ஜான்சென், ரிச்சர்ட் க்ளீசன், ஓட்னியல் பார்ட்மேன், லியாம் டௌசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டேவிட் பெட்டிங்ஹாமும் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 39 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய ஜோர்டன் ஹார்மன் - கேப்டன் ஐடன் மார்க்ரம் இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் ஹார்மன் 23 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்முலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.