பும்ரா இல்லாமல் விளையாடப் பழகிக்கொள்ள வேண்டும் - சபா கரீம்!

Updated: Tue, Feb 28 2023 11:46 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் பும்ரா வரும் ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐந்து மாதத்திற்கு முன்பு கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப மாட்டார் என்றும் அவருடைய காயம் குணமடைந்த பிறகு இந்திய அணிக்காக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பும்ரா குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம், “பும்ராவின் காயத்தை நாம் பார்த்தால் அவர் தன்னுடைய பந்து வீசும் ஸ்டைலையே மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. பும்ரா நீண்ட காலத்திற்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைத்தால் அவர் எந்த கிரிக்கெட்டில் விளையாட போகிறோம் என்பதை தேர்வு செய்து பங்கேற்க வேண்டும்.

தற்போதுள்ள சூழலில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் தேர்வு குழுவினரும் பும்ரா இல்லாமல் ஒரு பந்து வீச்சு படையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதை உணர்ந்து இருப்பார்கள். அதற்காக முதலில் பும்ரா  இல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களை தயார் செய்ய வேண்டும். பும்ரா பந்து வீசும் முறையால் அவருடைய முதுகில் அழுத்தம் அதிக அளவில் ஏற்படுகிறது.

இதனால் தான் அவர் தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருகிறது. பும்ராவில் பணி சுமை சரியான முறையில் தான் கவனிக்கப்பட்டது. முதலில் அவர் வெள்ளை நிற கிரிக்கெட்டில் தான் கவனம் செலுத்தினார். அதன் பிறகு தான் சிவப்பு நிற கிரிக்கெட்டுக்கு வந்தார். பும்ராவுக்கு இரண்டு போட்டிகளுக்கு நடுவே நிறைய ஓய்வுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

பும்ரா எந்த தொடரில் விளையாட வேண்டும் என்று தேர்வு செய்ய தொடங்கி விட்டால், வீரர்களை தேர்வு செய்யும் குழுவினருக்கு தான் அவர்களது பணி கடினமாகும். ஏனென்றால் எப்போதுமே தேர்வு குழுவினர் ஒரு பந்துவீச்சாளரை சுற்றி தான் அணியின் பந்துவீச்சின் படையை உருவாக்குவார்கள். பும்ரா தொடர்ந்து உடல் தகுதியுடன் இருந்தால் அது இந்திய அணிக்கு பெறும் பலமாக இருக்கும். ஆனால் நாம் அவர் இல்லாமல் விளையாட பழகிக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு எந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. அவர் இல்லாமல் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் தான் பணியை கவனித்து வருகிறார்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை