சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சனை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!

Updated: Sat, Mar 09 2024 15:16 IST
சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சனை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்! (Image Source: Google)

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அடுது களமிறங்கிய இந்திய அணி 477 ரன்களை குவித்தது. 

அதன்பின் 259 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதித்துள்ளது.  

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 698 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் பிரம்மாண்ட சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். முன்னதாக  இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளை கைப்பற்றி 2ஆவது இடத்திலும் உள்ள நிலையில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்றாவது வீரராக இப்பட்டியலில் இணைந்துள்ளார்.

 

இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். ஜேம்ஸ் ஆண்டர்சனை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில், “ஆஸ்திரேலியாவில் தான் முதல்முறையாக ஆண்டர்சனை கவனித்தேன். அப்போது அவர் பந்தை கட்டுப்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அப்போது நாசர் ஹுசைன் ஆண்டர்சனைப் பற்றி மிகவும் உயர்வாக பேசினார். இன்றும் அவர் ஆண்டர்சனை பார்த்து, நான் அப்போதே சொன்னேன் என்று பெருமை கொள்வார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் என்பது மகத்தான சாதனை. ஒரு வேகப்பந்துவீச்சாளராக 22 ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடி 700 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பதே கற்பனைக்கும் எட்டாத ஒரு விஷயமாக தான் இருந்தது. ஆனால் இன்று ஆண்டர்சன் அதனை செய்து காட்டிவிட்டார்” என்று பாராட்டியுள்ளார். இங்கிலாந்து அணிக்காக 186 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 32 முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதும் அடங்கும். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை