விராட் கோலியைப் புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கௌகாத்தில் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியஇந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ரோகித் படை 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 373 ரன்களை குவித்தனர். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெறும் 306 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் விராட் கோலி எனக்கூறலாம். தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (83) மற்றும் சுப்மன் கில் (70 ) நல்ல அடிதளத்தை அமைக்க, கோலி அதை எந்தவித குறையும் இன்றி எடுத்துச்சென்றார். 87 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என 113 ரன்களை குவித்தார். இதனால் சீரான வேகத்தில் இந்தியா 373 ரன்களை தொட்டது.
இந்த சதத்தின் மூலம் கோலி புதிய சாதனையை படைத்தார். அதாவது இலங்கை அணியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவராக சச்சின் (8) இருந்தார். தற்போது கோலி 9 சதம் அடித்து முந்திவிட்டார். இதே போல சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் சச்சின் இருவருமே தலா 20 சதங்களுடன் சமநிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில் பதிவில், “இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை உங்களிடம் தொடர வேண்டும். இந்தியாவின் பெயரை மிக உயரத்திற்கு கொண்டு சென்றுக்கொண்டே இருங்கள். இதே போல டாப் ஆர்டரிலும் மிக நேர்த்தியான செயல்பாடுகளை செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
கோலியின் முன்னுதாரணமாக உள்ள சச்சின் இப்படி பாராட்டியிருப்பது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சச்சினின் மற்றொரு சாதனைக்கு அருகில் விராட் கோலி சென்றுவிட்டார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை அடித்திருக்கிறார். விராட் கோலி தற்போது 45 சதங்களை அடித்துள்ளார். இன்னும் 5 சதங்களை அடித்துவிட்டால், சச்சினை முந்தி விராட் கோலி உலக சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.