இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்ற நியூசிலாந்து அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த் வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதன்படி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கான்வே 76 ரன்களையும், ரவீந்திரா 65 ரன்களையும் சேர்க்க, இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் ஆட்டானது. இதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 38 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லேதம் 86 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 48 ரன்களையும் சேர்க்க, இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 255 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தார். இதில் ஜெய்ஸ்வால் 77 ரன்களைச் சேர்க்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா 42 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்த இன்னிங்ஸிலும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் சான்ட்னர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றுள்ள நியூசிலாந்து அணிக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவிற்கு வருகை தரும் எந்தவொரு அணிக்கும், இங்கு டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஒரு கனவாகும், அதனை தற்சமயம் நியூசிலனது அணி செய்துள்ளது. ஒரு அணியாக குழு முயற்சிகளால் மட்டுமே இத்தகைய முடிவுகளை அடைய முடியும். மேலும் இப்போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் சான்ட்னருக்கு எனது பாராட்டுகள். இந்த அபார சாதனைக்காக நியூசிலாந்து அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து இவரது எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.