வீரர்களை தக்கவைப்பதில் சஞ்சு சாம்சன் பெரிய பங்கு வகித்தார் - ராகுல் டிராவிட்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு நேற்றைய தினமே (அக்டோபர் 31) கடைசி நாள் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்,கேகேஆர் உள்ளிட்ட அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், பஞ்சா கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. சென்னை, லக்னோ, குஜராத், மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துள்ளன.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 வீரர்களை தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் தொடகக் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ரூ.18 கோடிக்கு தக்கவைப்பதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதவிர்த்து ஆல் ரவுண்டர் ரியான் பராக்கை ரூ.14 கோடிக்கும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலை ரூ.11 கோடிக்கும், ஷிம்ரான் ஹெட்மையரை ரூ.11 கோடிக்கும் தக்கவைத்துள்ள அந்த அணி, அன்கேப்ட் வீரராக சந்தீப் சர்மாவை ரூ.4 கோடிக்கும் தக்கவைத்துள்ளது. இதனால் எதிர்வரும் மெகா ஏலத்தில் அந்த அணி மிகக்குறைந்த தொகையுடன் பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில் அணியின் தக்கவைப்பு பட்டியலை தேர்வு செய்வதில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மிக முக்கிய பங்கினை வகித்துள்ளார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வீரர்கள் ஏலத்திற்கு முன்னர் நாங்கள் ஆறு வீரர்களைத் தக்கவைக்க முடிவுசெய்தோம். அதன்படி சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மையர் மற்றும் சந்தீப் ஷர்மா ஆகியோரை நாங்கள் தக்க வைத்தோம். வீரர்களின் திறமையை நம்பி இந்த முடிவுக்கு வந்தோம்.
இவர்களை உள்ளடக்கி நாங்கள் மொத்த அணியையும் கட்டமைப்போம் என்று நம்புகிறோம்.சஞ்சு சாம்சன் எங்கள் அணியின் சிறந்த பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன். அவர் பல ஆண்டுகளாக இந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். எனவே, எதிர்காலத்திலும் அவர் எங்கள் கேப்டனாக இருப்பார் என்பதால் அவரைத் தக்கவைத்துக்கொள்வது எங்களுக்குத் தேவையன ஒன்றாக இருந்தது. அவர் எங்களுக்கு ஒரு சிறந்த தக்கவைப்பாளராக இருந்தார், மேலும் அவர் வீரர்களின் தக்கவைப்பு முடிவுவிலும் பெரும் பங்கினை வகித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அந்தவகையில் சஞ்சு சாம்சன் வீரர்கள் தக்கவைப்பதில் பெரிய பங்கு வகித்தார், மேலும் அது அவருக்கும் கடினமாக இருந்தது. ஒரு கேப்டனாக, அவர் வீரர்களுடன் நிறைய உறவுகளை உருவாக்கியுள்ளார். இதைப் பற்றி அவர் நிறைய சமநிலையான கருத்துக்களைக் கொண்டிருந்தார். இதன் இயக்கவியல், இதன் சாதக பாதகங்களைப் புரிந்து கொள்ள சிரமம் எடுத்துள்ளார். எனவே, இதை எங்களுடன் விவாதித்ததற்காக அவரைப் பாராட்ட விரும்புகிறேன். எங்களுக்கும் அது எளிதான முடிவு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.