சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சஞ்சு சாம்சன்!

Updated: Sat, Nov 16 2024 09:20 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி ஜோஹன்னஸ்பர்கில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால் அந்த 10 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டபஸ் மற்றும் டேவிட் மில்லர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து 5ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர். பின் மில்லர் 36 ரன்னும், ஸ்டப்ஸ் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் மார்கோ ஜான்சன் 29 ரன்களைச் சேர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு நடையை கட்டியதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இப்போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது. மேலும் சதமடித்து அசத்திய திலக் வர்மா, தொடர் மற்றும் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய வீரர் சஞ்சு சாம்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார். அதன்படி ஒரே ஆண்டில் 3 சர்வதேச டி20 சதங்களை பதிவுசெய்த முதல் வீரர் எனும் சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். மேற்கொண்டு இந்திய அணி தரப்பில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலிலும் சஞ்சு சாம்சன் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 5 சதங்களுடன் முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் 4 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில், தற்சமயம் சஞ்சு சாம்சன் 3 சதங்களை விளாசி இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்த இடங்களில் கேஎல் ராகுல் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தொடர்கின்றனர். 

இதுதவிர்த்து இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய விக்கெட் கீப்பர் பேட்டர்கள் பட்டியலிலும் சஞ்சு சாம்சன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 52 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் 46 சிக்ஸர்களை விளாசி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக ரிஷப் பந்த் 44 சிக்ஸர்களை விளாசி இரண்டாம் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் இந்திய அணி தரப்பில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியளிலும் சஞ்சு சாம்சன் 10ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 205 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் 145 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும், விராட் கோலி 124 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் சஞ்சு சாம்சன் 19 சிக்ஸர்களை விளாசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை