ஐஎல்டி20: ஹெட்மையர் அதிரடியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கல்ஃப் அணி பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு முஸ்தபா - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் முஸ்தபா 23 ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன் காலின் முன்ரோ 39 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் இப்போட்டியில் நிச்சயம் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் 57 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 99 ரன்களைச் சேர்த்த நிலையில் கிறிஸ் ஜொர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். முன்னதாக இவர் கடந்த போட்டியில் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைச் சேர்த்தது. கல்ஃப் ஜெயண்ட்ஸ் தரப்பில் ரிச்சர்ட் கிளீசன், லியாம் டௌசன், டேவிட் வைஸ், கிறிஸ் ஜோர்டன் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் டாம் பாண்டன் 3 ரன்னிலும், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 4 ரன்களிலும், அடுத்து வந்த ரெஹான் அஹ்மத் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கிறிஸ் லின் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து ரசிகர்களுக்கு விருந்துபடைத்தனர். அதன்பின் 71 ரன்களில் கிறிஸ் லின் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 70 ரன்களைச் சேர்த்திருந்த ஹெட்மையரும் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அதன்பின் களமிறங்கிய டேவிட் வைஸ் - லியாம் டௌசன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றித் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தியது.