2nd Test, Day 2: ஷாத்மான் இஸ்லாம் அபார சதம்; முன்னிலையில் வங்கதேசம்!

Updated: Tue, Apr 29 2025 20:37 IST
Image Source: Google

வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஏப்ரல் 28) சிட்டாகாங்கில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்கள் பென் கரண் மற்றும் பிரையன் பென்னட் ஆகியோர் தலா 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த நிக் வெல்ச் - சீன் வில்லியம்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பொறுப்புடன் விளையாடிய இருவரும் தங்களுடையை அரைசதங்களைக் கடந்ததுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் நிக் வெல்ச் 54 ரன்களிலும், சீன் வில்லியம்ஸ் 67 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் களமிறங்கிய வீரகளும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை  தஃபட்ஸ்வா சிகா 18 ரன்களுடனும், பிளெசிங் முசரபானி 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜிம்பாப்வே அணி மேற்கொண்டு ரன்களைச் சேர்க்காமல் 277 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளையும், நயீம் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணிக்கு சாத்மான் இஸ்லாம் - அனமுல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அனமுல் ஹக் 39 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மொமினுல் ஹக் 33 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாத்மான் இஸ்லாம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2ஆவது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 120 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஷாத்மான் இஸ்லாமும் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ 23 ரன்னிலும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 40 ரன்னிலும், ஜக்கர் அலி, நயீம் ஹசன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களைக் குவித்தது. இதில் மெஹிதி ஹசன் மிராஸ் 16 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே தரப்பில் வின்சென்ட் மசேகேசா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை