வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஷாய் ஹோப்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ் இண்டீஸ் அணியானது கேப்டன் ஷாய் ஹோப்பின் சதத்தின் மூலமும், கேசி கார்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக் கேப்டன் ஷாய் ஹோப் 117 ரன்களையும், கேசி கார்டி 71 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜான் டர்னர், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து 329 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணியானது லியாம் லிவிங்ஸ்டோனின் அதிரடியான சதத்தின் மூலம் 47.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 329 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் அதிரடியாக விளையாடிய கேப்டன் லியாம் லிவிங்ஸ்டன் சதம் 5 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 124 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய பில் சால்ட் 59 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 55 ரன்களையும், சாம் கரன் 52 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாளை தொடரை இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது.’
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் சாய் ஹோப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சதங்கள் அடித்த 3ஆவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக இந்த பட்டியலில் அந்த அணியின் முன்னாள் வீரர் டெஸ்மண்ட் ஹெய்னஸ் 238 போட்டிகளில் 17 சதங்களை அடித்து மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் ஷாய் ஹோப் 128 போட்டிகளிலேயே 17 சதங்களை விளாசி அவரது சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் சாதனை கிறிஸ் கெயில் தனது பெயரில் வைத்துள்ளார். அவர் 298 போட்டிகளில் விளையாடி 25 சதங்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்ததாக முன்னாள் வீரர் பிரையன் லாரா 295 போட்டிகளில் விளையாடி 19 சதங்களுடன் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.