ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய ரோஹித் சர்மா!

Updated: Fri, Jul 08 2022 13:32 IST
Image Source: Google

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. 

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங்கில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 51 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களையும், தீபக் ஹூடா 33 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 148 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.

இந்திய அணி சார்பாக ஹார்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்த போட்டியில் தங்களது முதிர்ச்சியான வெளிப்படுத்தினர். முதல் ஆறு ஓவர்கள் என்பது எப்போதுமே முக்கியம். 

அந்த வகையில் இந்த போட்டியின் போது பேட்ஸ்மேன்கள் அதனை கையாண்ட விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. சரியான ஷாட்களை விளையாடினால் நிச்சயம் போட்டியில் நாம் எப்போதும் முன்னிலையில் இருக்க முடியும்.

போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ரன்களை குவித்தால் என்ன நடக்கும் என்பது இந்த போட்டின் மூலம் தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் பேட்டிங் யூனிட் மிகச் சிறப்பாக விளையாடியதால் இந்த போட்டியில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. இந்த செயல்பாட்டை நாங்கள் அப்படியே தொடர விரும்புகிறோம்.

ஹார்டிக் பாண்டியா இன்று பந்துவீச்சில் அசத்தி விட்டார். இனிவரும் போட்டிகளிலும் அவர் நிறைய ஓவர்கள் வீச வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். அவரது பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டுமே இந்திய அணிக்கு பலம் தான்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை