இளம் வீரர்களின் செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியடைகிறேன் - ஷிகர் தவான்!

Updated: Fri, Apr 05 2024 12:34 IST
இளம் வீரர்களின் செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியடைகிறேன் - ஷிகர் தவான்! (Image Source: Google)

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஷுப்மன் கில்லின் அபார ஆட்டத்தின் மூலம் 199 ரன்களைக் குவித்தது. இதையடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இந்நிலையில், ஒரு நல்ல தொடக்கத்தை வழங்குவதே திட்டமாக இருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக நான் ஆட்டமிழந்தது வருத்தமளிக்கிறது. ஆனாலும் இரண்டு இளம் வீரர்கள் எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளனர் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,  “நிச்சயம் இதுவொரு அற்புதமான போட்டி என்று தான் சொல்ல வேண்டும். கடைசி வரை த்ரில்லாக அமைந்தது. நிச்சயம் பஞ்சாப் வீரர்கள் வெற்றியை பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இப்போட்டியில் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுப்பதே எங்களது திட்டமாக இருந்தது, ஆனால் நான் துரதிர்ஷ்டவசமாக நான் முன்கூட்டியே வெளியேறியது வருத்தமளிக்கிறது. இருப்பினும் நாங்கள் பவர்பிளே முடிவில் நாங்கள் 60 ரன்களில் இருந்தோம், நாங்கள் தொடர்ந்து பார்ட்னர்ஷிப்களை உருவாக்கினோம், ஷஷாங்க் உள்ளே வந்து நன்றாக விளையாடினார். அவர் களமிறங்கியதும் அடித்த ஒவ்வொரு சிக்சர்களையும் பார்க்கும் போது அற்புதமாக இருந்தது. அவர் பந்தை சிரமமில்லால் அடித்து ஆடினார்.

இந்த சீசனின் தொடக்கத்தில் அவர் எங்களுக்கா நம்பர் 7இல் இருந்து விளையாட தொடங்கி, தற்போது பாசிட்டிவ் மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐபிஎல்லில் விளையாடி வரும் அவர், சிறப்பாக விளையாடியதுடன் எங்களுக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்துள்ளார். இப்போட்டியில் அஷுதோஷின் ஆட்டமும் குறிப்பிடபட வேண்டியது. ஏனெனில் அழுத்தமான சூழ்நிலையில் களமிறங்கிய அவர் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை